அப்பாசியக் கலீபகம்

Nemachiyōtīlli:Infobox Former Country

அப்பாசியக் கலீபகம் இசுலாமியப் பேரரசின் கலீபகங்களில் மூன்றாவது கலீபகம் ஆகும். இது, அப்பாசிய வம்சத்தைச் சேர்ந்த கலீபாக்களால் ஆளப்பட்டது. பக்தாத்தில் தமது தலைநகரத்தை நிறுவியிருந்த அப்பாசிய வம்சத்தினர், அல் அந்தலூசு தவிர்ந்த ஏனைய இடங்களிலிருந்து உமய்யா கலீபாக்களை நீக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.

இவ்வம்சம் முகம்மது நபியின் இளைய சிறிய தந்தையாரின் வழிவந்தவரான அப்பாசு இபின் அப்துல் முத்தலிப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது கிபி 750ல், ஹர்ரான் என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் கிபி 762ல் பாக்தாத் தலைநகரம் ஆக்கப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகள் சிறப்புடன் திகழ்ந்த இவ்வம்சத்தின் ஆட்சி, இவர்கள் உருவாக்கிய படைப்பிரிவான மம்லூக்குகளின் எழுச்சியுடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பாரசீகப் பகுதி முழுதும் ஆட்சியைக் கைப்பற்றிய 150 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தமது அதிகாரத்தை உள்ளூர் அமீர்களுக்குக் கையளிக்க வேண்டியதாயிற்று. இவ்வமீர்கள், அப்பாசியர்களின் மேலாண்மையைப் பெயரளவிலேயே ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அல் அந்தலூசுக்குத் தப்பிச் சென்ற உமய்யா அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடமும், மக்ரிப், இஃப்ரீக்கியா போன்றவற்றை சுதந்திரமான அக்லாபியர், பாத்திமியர் போன்றோரிடமும் இழந்தனர்.

மொங்கோலிய ஆக்கிரமிப்பாளராகிய ஃகுலாகு கான் பக்தாத்தைக் கைப்பற்றிய பின்னர் 1258 இலிருந்து மூன்றாண்டுகள் இவர்களுடைய ஆட்சி இல்லாதிருந்தது. ஆனால் 1261 ஆம் ஆண்டில் எகிப்தில் உள்ள மம்லூக்கியரால் மீண்டும் தொடங்கியது. 1519 ஆம் ஆண்டில் அதிகாரம் முறையாக உதுமானியப் பேரசிடம் கையளிக்கப்படும்வரை அப்பாசியர்கள் மத அலுவல்களிலான தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.

குறிப்புகள்Xicpatla


Nemachiyōtīlli:இசுலாமிய கலீபகங்கள்

பகுப்பு:இசுலாமிய கலீபகங்கள் பகுப்பு:இசுலாமியப் பேரரசுகள்